மக்களவையில் மலேசியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்ட பிரச்சனையை எழுப்ப அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மறுப்பு தெரிவித்ததால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதையடுத்து அவை தள்ளிவைக்கப்பட்டது.
மக்களவையில் இன்று தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், மலேசியாவில் உரிமைகளுக்காக ஊர்வலம் நடத்த முயன்ற இந்தியர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கீதுகளைத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் கேள்வி நேரத்தின்போது எழுந்த தி.மு.க. உறுப்பினர்கள், மலேசியாவில் நடந்த நிகழ்வுகள் பற்றி விவரிக்கத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவைத் தலைவர், இப்பிரச்சனை தேவையற்றது என்று தெரிவித்தார்.
''மலேசியா நமது நட்பு நாடுகளில் ஒன்று. ஜனநாயகமான முறையில் செயல்படும் அந்நாட்டைப் பற்றி பெருமைக்குரிய மற்றொரு ஜனநாயக நாடான நம்முடைய மக்களவையில் விவாதிக்கப்படுவது தேவையற்றது. தி.மு.க. மட்டுமல்ல பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் இது தொடர்பாக தாக்கீதுகளைக் கொடுத்துள்ளனர். இவை எவற்றையும் நான் அனுமதிக்கப் போவதில்லை'' என்றார் சோம்நாத் சாட்டர்ஜி.
இதையடுத்து தாக்கீது கொடுத்த உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிடத் தொடங்கினர். அவர்களின் நடவடிக்கைகள் எதையும் பதிவு செய்யப் போவதில்லை என்பதால் அமைதியாக இருக்கும்படி அவைத் தலைவர் வலியுறுத்தினார்.
ஆனால், உறுப்பினர்கள் அவைத் தலைவரை முற்றுகையிடத் தொடங்கினர். இதனால் முதலில் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பை நிறுத்தும்படி உத்தரவிட்ட அவைத் தலைவர், பின்னர் அவையை மதியம் 1.00 மணிவரை தள்ளி வைத்தார்.