நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததையடுத்து கர்நாடகா சட்டப்பேரவை நேற்றிரவு கலைக்கப்பட்டது. இதையடுத்து விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தில் முதலமைச்சராக பதவியேற்ற பி.எஸ்.எட்டியூரப்பா குறுகிய காலத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கலைக்கப்படாமல் மீண்டும் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவையை கலைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையெழுத்திட்டதை தொடர்ந்து, நேற்றிரவு கர்நாடக சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.
முன்னதாக இந்த நடவடிக்கைக்கு மக்களவை, மாநிலங்களையில் மத்திய அரசு அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் பா.ஜ.க.- ம.ஜ.த. கூட்டணி ஆட்சியின் போது, முதல்வர் பொறுப்பில் இருந்த குமாரசாமி, கூட்டணி உடன்பாட்டின் படி ஆட்சியை பா.ஜ.க.விடம் ஒப்படைக்காததால், தனது ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றது.
இதனால் கர்நாடகத்தில் ம.ஜ.த. தலைமையிரான கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடகாவில் சட்டப் பேரவை கலைக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின்னர் நடந்த பல்வேறு அரசியல் திருப்பங்களின் முடிவில் பா.ஜ.க. ஆட்சியமைக்க ம.ஜ.த. ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இதனடிப்படையில் முதல்வர் பதவியேற்ற எட்டியூரப்பா, ஒரு வார காலத்திற்குள் பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.