டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் பதவிக்கான வயது உச்ச வரம்பை 65 ஆக நிர்ணயிக்கும் சட்ட திருத்த மசோதா பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் மாநிலங்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
சண்டிகரில் உள்ள பி.ஜி.ஐ. மருத்துவ உயர் கல்வி நிறுவனம், புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் இயக்குநர் பதவிகளுக்கு அதிகபட்ச வயதை 65 ஆக நிர்ணயிக்கும் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட வரைவு, அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனச் சட்டம் 1956, சண்டிகர் முதுநிலை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி சட்டம் 1966 ஆகிய இரண்டு சட்டங்களில் திருத்தத்தைச் செய்கிறது.
இந்த இரண்டு சட்டங்களிலும், கல்வி நிறுவனங்களின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை 3 மாதங்களுக்கு முன்பு தாக்கீது அனுப்பி நீட்டிப்பதற்கு கல்வி நிறுவனங்களின் ஆட்சிக் குழுவிற்கு அதிகாரமளிக்கும் பிரிவுகள் திருத்தத்தின் மூலம் நீக்கப்படுகின்றன.
மாநிலங்களவையில் இன்று இந்தச் சட்ட திருத்த மசோதாவை மத்திய நலவாழ்வு அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம் செய்து பேச முயன்றபோது, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டதால் அவையை இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது.
மதியம் அவை மீண்டும் கூடிய பிறகு, சட்ட திருத்த மசோதாவை விளக்கி அமைச்சர் அன்புமணி பேச முயன்றபோது, இந்த சட்ட வரைவு மருத்துவ உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரமான செயல்பாட்டை கடுமையாகப் பாதிக்கும் கூறி என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. அமளிக்கிடையில் சட்ட வரைவு மீது அவைத் துணைத் தலைவர் ரஹ்மான் கான் வாக்கெடுப்பு நடத்தினார். இறுதியில் சட்ட வரைவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதும் தள்ளி வைக்கப்பட்டது.