நமது அயலுறவுக் கொள்கைகளின் மகத்துவத்தைக் கருத்தில் கொண்டு வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பும், அடைக்கலமும் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தஸ்லிமா பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
''பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் நமது பாரம்பரியத்தை தற்போதைய அரசும் கொள்கையாகக் கொண்டுள்ளதால், தஸ்லிமாவுக்கு அடைக்கலத்தையும், பாதுகாப்பையும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தஸ்லிமா போன்று அடைக்கலம் பெற்றவர்கள், நமது நாட்டின் அரசியல் விவகாரங்கள், செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது, சர்வதேச நாடுகளுடனான இந்தியாவின் உறவுக்கு பங்கம் விளைவிக்காமல் இருக்கும்.
கடந்த காலங்களில் இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு மாநில அரசுகளும், யூனியன் அரசுகளும் பாதுகாப்பு வழங்கியுள்ளன. இது தஸ்லிமா விவகாரத்திலும் பொருந்தும்'' என்று அமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிக்கையை மாநிலங்களவையில் அயலுறவு இணையமைச்சர் ஆனந்த் சர்மா வாசித்தார்.