நாகாலாந்தில் ஆளும் நாகாலாந்து ஜனநாயக கூட்டணி அரசின் பெரும்பான்மை மெல்ல மெல்லச் சரிந்து வருகிறது.
போக்குவரத்து அமைச்சர் தொகெஹோ, 2 சுயேட்சை உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.
தற்போது பதவி விலகியுள்ள அமைச்சர் தொகெஹோ, உன்கெபோட்டோ மாவட்டத்தில் உள்ள அகுனாட்டோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஆவார்.
அவருடன் 2 சுயேட்சை உறுப்பினர்களும், நாடாளுமன்றச் செயலாளர்கள் பி.சுபா சங்க், ஜொங்சிலம்பா ஆகியோரும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து நேற்றிரவு அமைச்சர் தொகெஹோ கூறுகையில், அமைச்சரவையிலிருந்து மட்டுமே தான் பதவி விலகியுள்ளதாகவும், என்.பி.எஃப். கட்சி உறுப்பினாராக தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவித்தார்.
மாநிலத்தில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் மாநில அரசு தவறிவிட்டதைக் கண்டித்து தான் பதவி விலகியதாக அமைச்சர் தொகெஹோ கூறினார்.
பல்வேறு தனியார் நிறுவனங்கள் அரசுடன் சேர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வரிவசூல் மையங்களை அமைத்துள்ளன. போக்குவரத்து நிறுவனங்களிடம் இவர்கள் அதிகமாக வரிவசூலிப்பதால் அடிப்படைத் தேவைப் பொருட்களின் விலை மிகவும் உயர்ந்துவிட்டது என்று அவர் குற்றம்சாற்றினார்.
இதனால் ஆளும் நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியின் பலம் 33 ஆகக் குறைந்துவிட்டது. இதில் 28 என்.பி.எஃப், 4 பா.ஜ.க., 1 சுயேட்சை உறுப்பினர்கள் அடக்கம்.
ஐக்கிய ஜனதாதள கட்சியின் 2 உறுப்பினர்கள் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஏற்கெனவே திரும்பப் பெற்றுவிட்டனர்.
நாகாலாந்து சட்டப் பேரவையில் மொத்தம் 60 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 5 உறுப்பினர்கள் ஏற்கெனவே பதவி விலகிவிட்டதால் 55 உறுப்பினர்கள் மட்டுமே பதவியில் உள்ளனர். எதிர்க் கட்சியான காங்கிரசிடம் 17 உறுப்பினர்கள் உள்ளனர்.