நமது நாட்டில் தற்போது 4,120 மெகாவாட்டாக உள்ள அணுமின் உற்பத்தி 2011 ஆம் ஆண்டில் 7,280 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிரித்விராஜ் செளகான், நமது நாட்டில் நடந்து வரும் அணு உலை கட்டுமானப் பணிகள் அனைத்தும் 2011 ஆம் ஆண்டிற்குள் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்.
''நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 3 விழுக்காடு அணுசக்தியால் உற்பத்தியாகிறது.
வளர்ந்த நாடுகளில் அணுமின் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. பிரான்சில் 78 விழுக்காடு, ஜெர்மனியில் 32 விழுக்காடு, ஜப்பானில் 30 விழுக்காடு, கொரியாவில் 39 விழுக்காடு, பிரிட்டனில் 18 விழுக்காடு என்றவாறு மின் உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு உள்ளது.
இந்தியாபோன்ற வளர்ந்துவரும் நாடுகளான பிரேசிலில் 3 விழுக்காடு, சீனாவில் 2 விழுக்காடு மின் உற்பத்தி மட்டுமே அணுசக்தியால் பெறப்படுகிறது'' என்று அவர் தனது பதிலில் கூறியுள்ளார்.