உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் ஹிந்தியை மட்டுமே அலுவலக மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அளித்துள்ள பரிந்துரையை எதிர்த்து தமிழக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை 12.30 மணிவரை தள்ளி வைக்கப்பட்டது!
மக்களவையில் இன்று பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வங்கதேசத்திலிருந்து வெளியேறியுள்ள சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருக்கலாம் என்று தெரிவித்தார்.
அப்போது எழுந்த பா.ஜ.க. உறுப்பினர் வி.கே.மல்கோத்ரா, தஸ்லிமா பாதுகாப்பாக இருக்கிறார் என்றால் எங்கிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியதுடன், தஸ்லிமா விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையில் ஒரிசாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து அவைக்கு நடுவில் வந்து, தனிமக்கொள்கை பற்றி உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
அப்போது தமிழக உறுப்பினர்களும் எழுந்து உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் ஹிந்தியை மட்டுமே அலுவலக மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு அளித்துள்ள பரிந்துரையை எதிர்த்து முழக்கமிட்டனர்.
இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் அதிகரித்ததால், 12.30 மணி வரை அவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது.