இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் நாளை விவாதம் நடக்கிறது.
மதியம் 2 மணிக்கு விதி 193-ன் கீழ் வாக்கெடுப்பு இல்லாத விவாதத்திற்கு அணுசக்தி ஒப்பந்தவிவகாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக அணுசக்தி ஒப்பந்த விவாரத்தை விதி 184 -ன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கோரிக்கை விடுத்தது.
இடதுசாரிகளும், அணுசக்தி ஒப்பந்தத்தால் நமது நாட்டின் அணுசக்தி திட்டங்கள் பாதிக்கப்படும் என்ற கோணத்தில் தங்களின் கருத்துகளை முன்வைக்க தயாராகி வருகின்றனர்.
நாளை நடக்கவுள்ள விவாதத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங் மக்களவைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் எப்போது இந்த விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரக்குழு இன்று மாலை கூடுகிறது.