இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் மிரட்டலுக்கு ஆளாகியுள்ள வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை பாதுகாக்க முடியாவிட்டால் அவரை குஜராத்திற்கு அனுப்புங்கள் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிவைத்த நரேந்திர மோடி, தஸ்லிமா குஜராத்தில் தங்குவதாக இருந்தால் அவரை வரவேற்கிறோம். இங்கிருந்து அவர் இலக்கியத்துறையில் பணியாற்றி மனித குலத்திற்குச் சேவை செய்யட்டும் என்றார்.
''சோனியாவின் கூட்டாளிகள் தஸ்லிமாவை மேற்குவங்கத்தில் இருந்து ஓடுமாறு செய்துவிட்டார்கள். தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் தஸ்லிமா மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகப் பேசுவதற்குத் தேவையான தைரியத்தைப் பெற்றுள்ளார்.
அவரை மத்திய அரசால் பாதுகாக்க முடியாவிட்டால் குஜராத்திற்கு அனுப்பி வைக்கட்டும். நாங்கள் அவரை வரவேற்கிறோம். குஜராத்தில் உள்ள 5.5 கோடி மக்களும் தஸ்லிமாவுக்குப் பாதுகாப்பை அளிப்பார்கள்'' என்றார் நரேந்திர மோடி.