நாடு முழுவதும் உள்ள 600 மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நவீன இரத்த சேமிப்பு வங்கிகளும், அனைத்த மாநில தலைநகரங்களில் மாதிரி இரத்த சேமிப்பு வங்கிகள் அமைக்கப்படும் என்று டெல்லியில் நடைப்பெற்ற பாதுகாப்பான இரத்தம் வழங்குவது தொடர்பான தேசிய கருத்தரங்கில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
நான்கு மண்டலங்களின் தேவையை எதிர்கொள்ளும் வகையில் 4 பெருநகரங்களில் இரத்த சேமிப்பு - பயன்பாட்டுத் துறையில் தலைச்சிறந்த நிபுணர்களைக் உள்ளடக்கிய மையங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். ஆண்டுக்கு 1.5 லட்சம் லிட்டர் இரத்தத் துகள்களைச் சுமந்துச் செல்லும் திரவ பகுத்தல் (Plasma fractioning unit ) திறன் கொண்ட மையம் அமைக்கப் படவுள்ளதாகவும் அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
தேசிய இரத்த ஆணையம் அமைக்கப்பட்டு, இரத்த தானத்தை ஊக்குவிப்பது, நோயாளிகளுக்கு இரத்த பரிமாற்றம் செய்வதை ஒழுங்குபடுத்துவது, இரத்த சேமிப்பு உள்ளிட்ட பிற கொள்கை வகுப்பது தொடர்பான பணிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இரத்த பரிமாற்றத்தின் மூலம் ஹெச்.ஐ.வி. கிருமிகள் பரவுவதை 2 விழுக்காடு அளவுக்கு குறைத்துள்ளதாகவும், இதனை மேலும் குறைத்து 0.5 விழுக்காடு அளவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.