நமது எல்லைப் பகுதிகளில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 499 ஊடுருவல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் எழுத்துப்பூர்வமாகஅளித்துள்ள பதிலில், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயங்கரவாதச் சதிச்செயல்கள் கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததைவிட வெகுவாகக் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
''2005 ஆம் ஆண்டில் 597 ஊடுருவல் வழக்குகளும் 2006 ஆம் ஆண்டில் 573 ஊடுருவல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்ட முயன்ற தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் வரை 54 ரகசியத் தகவல் தொடர்புத் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் மட்டும் பெருமளவிலான வெடிபொருட்கள், பூஸ்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள், இயந்திரத் துப்பாக்கிகள், ரிவால்வர்கள், பிஸ்டல்கள், கைத்துப்பாக்கிகள், ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்பட 4000 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காஷ்மீர், பஞ்சாப் மாநில எல்லைகளில் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 450 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன'' என்று அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.