மேகாலயாவில் வங்கதேசத்தைச் சேர்ந்த உல்ஃபா தீவிரவாத இயக்கத் தலைவனை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவனிடமிருந்து 1,000 ரூபாய் நோட்டுகள் ஆயிரக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டன.
மேகாலயாவின் மேற்கு காரோ மாவட்டத்தில் உள்ள திக்ரிகில்லா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் தோரின் ஆர் மராக் என்ற உல்ஃபா தீவிரவாத இயக்கத் தலைவன் கைது செய்யப்பட்டான்.
அவன் வங்கதேசத்தில் இருந்து 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளை கொண்டுவந்து இந்தியாவின் பல பகுதிகளில் வினியோகம் செய்துள்ளான் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவனிடமிருந்து ஆயிரக்கணக்கான 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. க்கும் உல்ஃபா தீவிரவாதிகளுக்கும் தொடர்புள்ளது என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ்.ஐ. அமைப்பு தனது சதிச் செயல்களுக்கு உல்ஃபா இயக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்குப் பல்வேறு பொருட்களை ஐ.எஸ்.ஐ. அமைப்பிற்காக உல்ஃபா இயக்கத்தினர் கடத்துகின்றனர் என்று உளவுத்துறை வட்டாரங்கள் கூறின.
இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதியின் மீது கடவுச்சீட்டு சட்டம், அயல்நாட்டுச் சட்டம், கள்ள நோட்டுத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.