கடல் வழியாக கடத்தலில் ஈடுபடும் பயங்கரவாதிகள், தமிழகக் கடற்கரையோரங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் கேரளக் கடற்கரைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்று கடற்படையின் தென்னிந்திய தளபதி சுனில் கே டேம்லே கூறியுள்ளார்.
கொச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பயங்கரவாதிகளின் போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களுக்கு தமிழகத்தில் முழுமையான தடை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் திருவனந்தபுரம், கொச்சி கடற்கரைகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர் என்றார்.
''கேரளக் கடற்கரைகளில் நடந்துள்ள சில சட்ட விரோதக் கடத்தல்களைக் காவல்துறை, கடலோரக் காவல்படை, கடற்படை ஆகியவை கண்டுபிடித்துள்ளன. இன்னும் முழுமையான சோதனை நடத்தப்பட வேண்டியது அவசியம். கடலோரக் காவல்படைக்குத் தேவையான எல்லா எதவிகளையும் செய்ய கடற்படை தயாராக உள்ளது.
கொங்கன் கடற்பகுதிகளில் ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்துக் கடத்திய பயங்கரவாத அமைப்புகளின் விவரங்கள் தெரியவந்துள்ளன. தற்போது அவ்வமைப்புகள் கேரளத்தின் மலபார் கடற்கரையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
நாட்டின் அயலுறவு, பாதுகாப்புக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தியக் கடற்படை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நம்மிடம் தற்போது 118 கப்பல்கள், 16 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இன்னும் கூடுதலான தளவாடங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார் டேம்லே.