உ.பி. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை பற்றி இருவேறு விவரங்கள் மக்களவையில் கூறப்பட்டதற்கு உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால்கூச்சலும் குழப்பமும் நிலவியது.
மக்களவையில் இன்று உ.பி. தொடர் குண்டு வெடிப்பு பற்றி மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் விளக்கமளித்தார்.
அப்போது 3 நகரங்களில் நடந்த 5 குண்டு வெடிப்புகளில் 4 வழக்கறிஞர்கள் உள்பட 13 பேர் பலியாயினர், 80 பேர் படுகாயமடைந்தனர் என்று பாட்டீல் தெரிவித்தார்.
ஆனால் முன்னதாக பேசிய அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, 14 பேர் பலியாகியுள்ளனர், 59 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைச்சரை விமர்சித்து கூச்சலிட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
இதையடுத்து, அவையில் உறுப்பினர்கள் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை என்றால் அவையை தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மக்களவைத் தலைவர் எச்சரித்தார்.
முன்னதாக, நமது நாட்டில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கோரிக்கை விடுத்தார்.
உத்தரபிரதேசம், ஹைதராபாத், மும்பை, டெல்லி நகரங்களில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகள் மிகவும் கவலையளிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், 'அஸ்ஸாமில் நடந்த குண்டு வெடிப்புகள் பற்றிய சில விவரங்கள் கிடைத்துள்ளன. மற்ற மாநிலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் பற்றி அந்தந்த மாநில அரசுகள் விசாரணை நடத்தி வருகின்றன. தேவைப்பட்டால் பயங்கரவாதம் குறித்து அவையில் விவாதம் நடத்தலாம்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவாதம் இந்தக் கூட்டத் தொடரில் நடக்கவுள்ளது. அதற்கான தேதி நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.