உத்தரபிரதேசத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களை முன்று முறை தள்ளிவைக்கப்பட்டது.
இன்று காலை மாநிலங்களை தொடங்கியவுடன் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று உ.பி. தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
''உள்துறை அமைச்சர் பதவிவிலக வேண்டும், பயங்கரவாதிகளின் படுகொலைகளை அனுமதிக்கக் கூடாது'' என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையின் மையத்திற்கு வந்து முழக்கமிட்டனர்.
அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்களின் இருக்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால் அவைத் தலைவரின் வேண்டுகோளை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எனவே வேறு வழியின் அவையை 12 மணிவரை தள்ளிவைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.
மீண்டும் தள்ளிவைப்பு!
இதையடுத்து 12 மணிக்கு மீண்டும் அவை கூடியவுடன், உ.பி. தொடர் குண்டுவெடிப்புகளில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் 2 நிமிடங்கள் அமைதியாக எழுந்து நின்றனர்.
பின்னர், உ.பி. விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் விளக்கமளிக்க ஆயத்தமானார்.
ஆனால், அவரை விளக்கமளிக்க விடாமல் பா.ஜ.க. உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவைக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், மத்திய அரசின் விளக்கக் குறிப்பின் நகல்களை தங்களுக்குத் தரவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதனால் நகல்களைத் தயார் செய்வதற்காக அவையை10 நிமிடங்களுக்கு தள்ளிவைத்து அவைத் தலைவர் ஹமீது அன்சாரி உத்தரவிட்டார்.
மூன்றாவது முறையும் தள்ளிவைப்பு!
இதைத் தொடர்ந்து 12.17 மணிக்கு அவை கூடியது. அப்போது மத்திய அரசின் சார்பில் விளக்க அறிக்கை தயாரிக்கப்பட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அலுவாலியா உள்ளிட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள், தங்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் நகல்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அவை மூன்றாவது முறையாக 15 நிமிடங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.