அஸ்ஸாமில் உல்பா தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா நகரில் நேற்று மாலை கார் குண்டு வெடித்தது. பெங்புகுரி என்ற பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து சிறிது நேரத்திற்குள் அதகான் என்ற இடத்தில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஃபட்டாசில் அம்பாரி என்ற இடத்தில் மூன்றாவது குண்டு வெடித்தது. ஆனால் இதில் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
இந்தக் குண்டு வெடிப்புகளுக்கு உல்ஃபா தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கவுகாத்தியில் ஆதிவாசி மாணவர் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 230 பேர் படுகாயமடைந்தனர்.
கலவரம் காரணமாக கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ந்துள்ள இந்தக் குண்டுவெடிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அஸ்ஸாம், ஜார்கண்டில் முழு அடைப்பு
இதற்கிடையில் ஆதிவாசி மாணவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று அஸ்ஸாம், ஜார்கண்ட் மாநிலங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
இப்போராட்டத்திற்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இரண்டு மாநிலங்களிலும் காலை முதல் போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டா சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''21 ஆதிவாசி மாணவர்களைக் காணவில்லை, இறப்பு எண்ணிக்கையை மறைக்கும் முயற்சி நடக்கிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிய அஸ்ஸாம் மாநில அரசு பதவி விலக வேண்டும்'' என்றார்.