அசாமில் ஆதிவாசி மாணவர்கள் நடத்திய ஊர்வலம் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தை அடக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள். அமைதியை நிலை நாட்ட ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஆதிவாசி மாணவர்கள் நேற்று தலைநகர் கவுகாத்தியில் ஊர்வலம் நடத்தினார்கள். தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து, அவர்களுக்குரிய சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரி இந்தப் பேரணி நடந்தது.
ஊர்வலத்தில் தங்களது கோரிக்கைகளை கோஷமாக எழுப்பி வந்த மாணவர்கள் சட்ட சபைக்கு செல்ல முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். வாகனங்களை அடித்து நொறுக்கினர். அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். ஆனாலும் கலவரக்காரர்கள் அடங்காததால் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதில் 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கல்வீச்சு சம்பவத்தில் பொது மக்களும், மாணவர்களும் 200 பேர் வரை காயம் அடைந்தனர். 60 கார், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தன.
இதற்கிடையே சாதாரண பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் கலவரத்தை அடக்க வரவழைக்கப்பட்டனர். அத்துடன் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.