கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் நடந்ததுபோல், சென்னை உள்பட பல முக்கிய நகரங்களிலும் குண்டுகள் வெடிக்கும் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், நேற்று முன்தினம் லக்னோ, பைசாபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்த மின்னஞ்சலில், சென்னையில் கே.கே.நகர், காஜியாபாத் (உ.பி.), டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் தொடர் குண்டுகள் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டெல்லி தனிப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் அலோக் குமார் மேற்பார்வையில் இந்த மிரட்டல் குறித்து விசாரணை நடைபெற்றது. கிழக்கு டெல்லியில் உள்ள இணைய தள மையம் ஒன்றில் இருந்து அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக, இணைய தள மையத்தின் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டபோது, 4 பேர் மையத்தில் இருந்து இருக்கிறார்கள். அவர்களில் 3 பேர் வழக்கமான வாடிக்கையாளர்கள்.
ஒருவர் மட்டும் அன்னியநபர். 5 அடி 8 அங்குலம் உயரம் உள்ள அந்த வாலிபர்தான், மிரட்டல் தகவலை அனுப்பி இருக்க வேண்டும் என்று கருதப்படு
கிறது. அவருடன் இருந்தவர்கள் கொடுத்த அடையாளங்களை வைத்து, அந்த வாலிபரின் உருவப்படத்தை வரைந்து தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தவிர, சில தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்க குறி வைத்து இருப்பதாக உளவு நிறுவனங்கள் எச்சரித்து உள்ளன. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக, நீதிமன்றங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். ரயில் நிலையங்களிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன என்று சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.