கொல்கத்தாவில் அமைதி நிலை திரும்பியதையடுத்து அங்கிருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கலவரம் கட்டுக்குள் வந்தபிறகு இரண்டாவது நாளாக நேற்றும் கொல்கத்தாவில் அமைதியான நிலை காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநில அரசின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நேற்று மாலை ராணுவம் திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து ராணுவத்தினர் தங்களது முகாம்களுக்கு திரும்பினர்.
நந்திகிராம் வன்முறைகளைக் கண்டித்து கொல்கத்தாவில் அகில இந்திய சிறுபான்மையின அமைப்பு நடத்திய போராட்டத்தின் போது பயங்கர கலவரம் வெடித்தது.
இதன் காரணமாக கொல்கத்தாவில் கடந்த புதன்கிழமையன்று இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறுநாள் காலை விலக்கிக் கொள்ளப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. இதனால் இயல்பு நிலை திரும்பியது.
இருப்பினும், நகரின் சில இடங்களில் தொடர்ந்து பதட்டம் நீடித்தது. இதனால் காவல்துறையினரும், ராணுவத்தினரும் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.