சீக்கியர்களின் மத குருவான குருநானக் தேவின் 538 வது பிறந்தநாள் விழா இன்று உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் வழிபட்டனர். சீக்கிய மதத்தின் புனிதப் நூலான குருகிரான்த் சாகிப்பிலுள்ள வரிகளைப் பாடினர்.
முன்னதாக அகால் தக்த் பகுதியிலிருந்து புறப்பட்ட நாகர் கீர்த்தன் என்ற வழிபாட்டு ஊர்வலம் முக்கியக் வீதிகள் வழியாக வலம் வந்தது. பின்னர் சப்பாத்தி, ரொட்டி, பருப்பு ஆகியவை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவ் கடந்த 1469 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தல்வாண்டியில் பிறந்தார். அந்த இடம் தற்போது நான்கனா சாகிப் என்று அழைக்கப்படுகிறது.
அவரின் நினைவு நாள்கள் குர்புராப் என்று அழைக்கப்படுகின்றன. அன்று அதிகாலையில் குருதுவாரா பகுதிகளில் இருந்து புறப்படும் வழிபாட்டு ஊர்வலம் நகரம் முழுவதும் வலம்வருகிறது.
இந்த விழாக்களின் இடையில் சீக்கியர்களின் புனித நூலான குருகிரான்த் சாகிப் தொடக்கம் முதல் இறுதிவரை 3 நாட்களுக்கு இடைவிடாமல் வாசிக்கப்படுகிறது.