காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோதலில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20,000 அபராதமும் விதித்து ஜம்மு அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி முகமது ஃபரூக் என்ற அபு ஷாம்செர் என்பவன் மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று ஜம்மு அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது அவனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜ.ஆர்.கோத்வால் தீர்ப்பளித்தார்.
அயல்நாட்டைச் சேர்ந்தவரான அபு ஷாம்செர், இந்திய எல்லைக்குள் ஏ.கே.47 துப்பாக்கியைக் கொண்டு வந்தது கடுமையான குற்றம் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி சிரியாலா காட்டிற்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியைராணுவம் சுற்றி வளைத்தது.
அப்போது ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. அன்று முழுவதும் நடந்த மோதலின் இறுதியில் அபு ஜபார், அபு விகாஸ், அபு ஹஸ்ராத் ஆகிய 3 தீவிரவாதிகளும், ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
முகமது ஃபரூக் என்ற அபு ஷாம்செர் மட்டும் ராணுவத்திடம் பிடிபட்டான். அவனிடமிருந்து 2 ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.