உ.பி. குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பெற்றுள்ளது. இந்த இயக்கம் தனது கடிதத்தை மின்னஞ்சல் வழியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்புகளில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் மீதான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. அதில் பயங்கரவாதிகளுக்கு எதிராக வாதிட்டுவரும் வழக்கறிஞர்களுக்கு கொலைமிரட்டல்கள் கூட வந்துள்ளன.
வாரணாசி நீதிமன்றத்திற்கு வரும் பயங்கரவாதிகளில் சிலர் வழக்கறிஞர்களுடன் நேரடி மோதலில் ஈடுபட்டதற்காகத் தண்டிக்கப்பட்டனர். இதனால் பழிவாங்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில் அண்மையில் உ.பி.யில் கைது செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் முழு விவரங்களும் தெரியவரும்.
குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம்: மாயாவதி!
உ.பி. தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 இலட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 மும் இழப்பீடாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோ, வாரணாசி, ஃபைசாபாத் ஆகிய 3 முக்கிய நகரங்களில் உள்ள நீதிமன்றவளாகங்களுக்கு வெளியே நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் 15-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 59 -க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000- மும் இழப்பீடாக வழங்கப்படும் என்று உ.பி.முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாயாவதி, உளவுத் துறைக்கு முன் கூட்டியே தகவல் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
''ஃபைசாபாத்தில் நடந்துள்ள 2 குண்டுவெடிப்புகளில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். வாரணாசியில் நடந்துள்ள 3 குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். லக்னோவில் 1 குண்டு வெடித்துள்ளது பலியானவர்களின் விவரம் வரவில்லை.
குண்டு வெடிப்புகளுக்குக் காரணமானவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வாரணாசியில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள் அமைதிகாக்க வேண்டும்'' என்றார் மாயாவதி.
நாளை முழு அடைப்பு
உ.பி.யில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகளுக்குக் கண்டனம் தெரிவித்து நாளை முழு அடைப்பிற்கு விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்குப் பல்வேறு ஹிந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.