உ.பி. தொடர் குண்டுவெடிப்புகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, நாட்டில் மதக் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று கூறியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால், ஒரே நேரத்தில் 3 நகரங்களில் குண்டுகள் வெடித்துள்ளதைப் பார்க்கும்போது, நாட்டை மதங்களின் அடிப்படையில் பிரித்தாள நினைக்கும் பயங்கரவாதிகளின் சதிச் செயல் போலத் தோன்றுகிறது. இத்தகைய பயங்கரவாதிகளின் சதி வெற்றி பெறுவதற்கு பொதுமக்கள் ஒருபோதும் துணைபோய் விடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.
''குண்டு வெடிப்பு நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சகம் உ.பி. அரசைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. மத்திய உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா உ.பி. காவல்துறைத் தலைவரைத் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளன என்று கேட்டறிந்தார்.
4 பேர் கொண்ட தேசியப் பாதுகாப்புப்படைக் குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இவர்கள் குண்டுவெடிப்பு நடந்த 3 நகரங்களுக்கும் சென்று விசாரணை நடத்துவார்கள்.
உ.பி. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்படி எல்லா மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால்.
சோனியா கண்டனம்!
உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுமக்களிடையே பீதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்துள்ள கோழைத்தனமான செயல் என்று கூறியுள்ளார்.
குண்டுவெடிப்புகளில் பலியானவர்கள் குறித்து ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள சோனியா, மத்திய மாநில அரசுகள் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றார்.