பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் இனிமேல் ரூபாய் 1.75 செலவில் அமெரிக்கா, கனடாவில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேசலாம் என்று பி.எஸ்.என்.எல். நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் கூறினார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கான தொலைபேசி கட்டணத்தை 300 விழுக்காடு அளவிற்கு பி.எஸ்.என்.எல் குறைத்துள்ளது. “கால்நவ்” ரக ரீசார்ஜ் கார்டுகளை பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்ஞார் நிகாம் லிட் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார்டுகள் ரூ.100, ரூ.300, ரூ.500, ரூ.1,000, ரூ.2,000 என்ற மதிப்பில் கடைகளில் கிடைக்கும்.
தற்போது அமெரிக்கா, கனடாவுக்கு தொடர்பு கொள்ள ஒரு நிமிடத்திற்கு ரூ.7.20 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இக்கார்டுகளை பயன்படுத்தப் போகும் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் சந்தாதாரர்கள் ஒரு நிமிடத்திற்கு ரூ.1.75 செலவில் அமெரிக்கா, கனடாவில் உள்ள தங்கன் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் என்று யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேச முடியும்.
பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான கட்டணம் அவர்கள் வாங்கும் கால்நவ் கார்டுகளின் பணமதிப்பை பொறுத்து ரூ.3.25 முதல் ரூ.4 வரை ஒரு நிமிடத்திற்கு வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.