சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை விமர்சித்து எழுதிய தஸ்லிமா நஸ்ரீனுக்கு எதிராக வங்க தேசத்தில் ஃபாத்வா பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர் மேற்கு வங்கத்தில் அடைக்கலம் புகுந்து வசித்து வந்தார்.
ஆனால், அவருக்கு எதிராக கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர். அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.
இதையடுத்து தஸ்லிமா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் தங்குவதற்கு விடுதிகளில் அறைகளைத் தர அவற்றின் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர்.
இறுதியில், ஷிக்கா என்ற விடுதியில் அறை கிடைத்தது. அங்கு நேற்று இரவைக் கழித்த தஸ்லிமாவுக்கு முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து மீண்டும் போராட்ட மிரட்டல்கள் வந்தன.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு தஸ்லிமா டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் பைசல் என்ற நபரும், ராஜஸ்தான் காவலர்கள் சிலரும் பாதுகாப்பிற்காகச் சென்றுள்ளனர்.
மேற்கு வங்க காவல்துறையின் வேண்டுகோளின்படி தஸ்லிமாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பினை ராஜஸ்தான் காவல்துறை வழங்கியுள்ளது.