பீகார் தலைநகர் பாட்னாவில் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் 2 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பீகாரில் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் பாட்னா காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து சோதனை நடத்தினர். இதில் கும்ஹரார், அகம்குரான் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் பதுங்கியிருந்த 2 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், புத்தகங்கள், டெட்டனேட்டர்கள், கைத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள், சிறைகள், பொது இடங்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.