ஆந்திர மாநில சட்டப்பேரவையில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.245 மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு கரீப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக முதல் தர நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.50 சேர்த்து ரூ.725 , மற்ற ரக நெல்லுக்கு ரூ.695 என அறிவித்தது. அதே நேரத்தில் கோதுமை குவின்டாலுக்கு ரூ.1,000 என அறிவித்தது.
விவசாய சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் கோதுமைக்கு வழங்குவது போல் நெல்லுக்கும் குவின்டாலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.
சென்ற வாரம் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, மேலும் கூடுதலாக ஊக்கத் தொகை ரூ.50 வழங்குவது என முடிவு செய்துள்ளது.
இந்த ஊக்கத்தொகையான ரூ.50 சேர்த்தால் சன்ன ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.775, மற்ற ரக நெல்லுக்கு ரூ.745 கிடைக்கும்.
ஆனால் அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் குறைந்த பட்ச ஆதார விலையை ரூ.1,000 என உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதற்கு ஆதரவாக நேற்று மாநிலங்களவையிலும் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நேற்று ஆந்திர மாநில சட்டசபையில் நெல் உட்பட விவசாய விளை பொருட்களின் ஆதார விலையை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
(அடைப்பு குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலைகள்).
இதன்படி, முதல் ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.1,098 வழங்க வேண்டும். சோளத்திற்கு ரூ.1,137 (ரூ.620 ) கம்புக்கு ரூ.1,179 (ரூ.600), மக்காச் சோளம் ரூ.925 (ரூ.620 ), கேழ்வரகு ரூ.1,189 (ரூ.600 ), துவரை 3,051 (ரூ.1,590), பருத்தி நீண்ட இழை ரூ 3,508 (ரூ.2.030), பருத்தி நடுத்தர இழை ரூ.3,081 (ரூ.1,800).
அத்துடன் மத்திய அரசு ஆமணக்கு, மிளகாய், மஞ்சள் ஆகியவைகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.