அவைத் தலைவரை மறைமுகமாகத் தாக்குவதும், அவரின் மீது குற்றச்சாற்றுகளை வீசுவதும் அவைக் கலாச்சாரமாக மாறி வருகிறது என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வருத்தத்துடன் கூறினார்.
மக்களவை இன்று காலை கூடியதும் கேள்வி நேரம் நடந்தது. அப்போது, பா.ஜ.க. உறுப்பினர் காரபெல்லா ஸ்வய்ன் பெட்ரோலிய விலை விவகாரம் குறித்துப் பேச முயன்றார். அதற்கு மக்களவைத் தலைவர் அனுமதியளிக்கவில்லை.
பின்னர் காரபெல்லா, ''இந்தப் பிரச்சனை எப்போதெல்லாம் அமைச்சருக்கு சிக்கலை ஏற்படுத்துகிறதோ அப்போதெல்லாம் என்னைக் கேள்வி எழுப்ப மக்களவைத் தலைவர் அனுமதிப்பதில்லை'' என்றார். மேலும் தனது இருக்கையில் உட்காரவும் மறுத்து அவர் கூச்சலிட்டார்.
இதனால் பொறுமையிழந்த அவைத் தலைவர் சாட்டர்ஜி, ''கேள்வியை அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டிய உரிமை மக்களவைத் தலைவருக்கு உள்ளது. அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. அவைத் தலைவரின் ஆளுமையை எதிர்க்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. இதைச் சகித்துக் கொள்ள முடியாது'' என்றார்.
''நீங்கள் விரும்பினால் நான் போய்விடுகிறேன்'' என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
இதற்கிடையில் எழுந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, ''இது போன்ற சிக்கல்களை முதன்முதலில் மக்களவை தொடங்கிய நாள் முதல் அவைத் தலைவர் உரிய முறையில் தீர்த்து வருகிறார்'' என்றார்.
ஆனால், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தங்களை வார்த்தைகளால் மடக்கப் பார்க்கிறார் என்று கருதிய பெரும்பான்மையான பா.ஜ.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சில நிமிடங்கள் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.