உப்ஹார் திரையரங்கில் நடந்த தீ விபத்தில் 59 பேர் பலியான வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்ட 12 பேருக்கும் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் திரையரங்கின் உரிமையாளர்களான அன்சால் சகோதரர்கள், சுஷில், கோபால் உள்பட 12 பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை இன்று கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மம்தா சேகல் முன்பு நடந்தது.
அப்போது, குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விபத்து நடந்தபோது திரையரங்கின் உரிமையாளர்கள் நிகழ்விடத்தில் இல்லை என்பதாலும், அன்சாலை நம்பி கூட்டுக் குடும்பம் இருப்பதாலும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்தியப் புலனாய்வுக் கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.