சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவதையடுத்து பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த தமது அமைச்சகம் முடிவு செய்ததாகவும், ஆனால் அதற்கு சோனியா காந்தி மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அமைச்சர் முரளி தியோரா கூறினார்.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, “ பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டாம் என்று சோனியா காந்தியிடமிருந்து கட்டளை வந்ததால் விலை உயர்வு முடிவை நிறுத்திவைத்தோம்” என்று கூறினார்.
இந்தியா - ஈரான் இடையிலான எரிவாயு திட்டத்தில் ஏற்பட்டுள்ள தடை குறித்து விளக்கிய தியோரா, பாகிஸ்தான் வழியாக குழாய் அமைத்து எரிவாயு கொண்டு வருவதற்கு அந்நாட்டிற்கு கட்ட வேண்டிய வரி குறித்து பேசி முடிவு செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
எரிவாயு இணைப்பு கோரி தற்போது 68,813 விண்ணப்பங்கள் உள்ளதென்றும், இவை அனைத்திற்கும் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இணைப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.