பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும் அவர் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருவதாகவும், இதனை கைவிட வேண்டும் என அவரை நேரில் வலியுறுத்த உள்ளதாகவும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் கூடுதல் பொதுச் செயலர் ஜாவித் இக்பால் தெரிவித்துள்ளார்.
கடந்த 14ஆம் தேதி பஞ்சாப் பல்கலைக்கழத்தில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தேரா காஸிகான் சிறையில் அடைக்கப்பட்டார். அன்று முதல் அவசர நிலையை விரைவில் திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
நேற்று விடுதலை செய்யப்பட்ட இம்ரான் கான், தற்போது முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த ஜூல்பிகர் கோஷா வீட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.