மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் நடந்த வன்முறைகளுக்கு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், இடதுசாரிக் கட்சிகளும்தான் காரணம் என்று மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி குற்றம்சாற்றியுள்ளார்.
மக்களவையில் இன்று நந்திகிராம் விவகாரம் தொடர்பாக நடந்த விவாதத்தில் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, ''கடந்த 2004 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள், நிலங்களைக் கையகப்படுத்துவதில் பதற்றத்தை உருவாக்கி விட்டன. அதேநேரத்தில் நந்திகிராமில் பயிரிடுவதற்காக தங்களின் நிலங்களை உழுதுள்ள விவசாயிகளின் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு மேற்குவங்க இடது முன்னணி அரசு மறுத்துவிட்டது'' என்றார்.
''தங்களின் நிலங்களை பயிர் உற்பத்தி திட்டத்திற்காக ஒப்படைத்துவிட்டு கொல்கத்தாவிற்கும், மற்ற நகர்ப் புறங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்றுவிட்ட நில உரிமையாளர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.
நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தப்படும் அறிவிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள்தான் முதலில் போராட்டத்தைத் தொடங்கினார்கள். இதை கட்டுப்படுத்த மேற்கு வங்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
திரைப்படங்கள், ஓவியங்கள், எழுத்து வடிவங்கள் ஆகியவற்றில் தங்களின் நடுநிலையான விமர்சனங்களையும் கருத்துகளையும் வெளியிட்டுவரும் இடதுசாரித் தன்மையுடைய அறிவாளிகளுக்கு நந்திகிராம் விவகாரத்தை மதிப்பிட அனுமதியளிக்க வேண்டும்.
நந்திகிராம் போன்ற தனிப்பட்ட வன்முறை நிகழ்வுகள் கடந்த 9 மாதங்களில் மேற்குவங்கத்தின் வேறெந்தப் பகுதிகளிலும் நடந்ததில்லை'' என்றார் பிரியரஞ்சன் தாஷ் முன்ஷி.