கொல்கத்தாவில் கலவரத்தைத் தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. நேற்றிரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை விலக்கிக் கொள்ளப்பட்டது.
நந்திகிராமில் நடந்த வன்முறைகளைக் கண்டித்தும், சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் மேற்குவங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் அகில இந்திய சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முக்கியமான நெடுஞ்சாலைகளில் திரண்டு போக்குவரத்திற்குத் தடைகளை ஏற்படுத்தினர். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் தடைகளை அகற்ற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள் காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகளுக்குத் தீவைத்தனர். கடைகளையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து கலவரத்தைக் கட்டுப்படுத்த காவலர்கள் கண்ணீர்புகை குண்டு வீச்சும் தடியடியும் நடத்தினர். இந்த மோதலில் காவல்துறை உயரதிகாரி ஒருவர் உட்பட 35 பேர் காயமடைந்தனர்.
கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. முக்கியச் சாலைகளில் ராணுவம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டது. நேற்றிரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்தாலும் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.
தஸ்லிமா நஸ்ரீன் வெளியேற வேண்டும்: மார்க்சிஸ்ட்
இதற்கிடையில், தஸ்லிமா நஸ்ரீன் மேற்குவங்கத்தில் தங்கியிருப்பது அமைதியைப் பாதித்தால், அவர் இம்மாநிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று மேற்குவங்க மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
''மேற்குவங்க மாநிலத்தில் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தங்கியிருக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்கு குறித்து நான் விரிவாக எதையும் கூற விரும்பவில்லை. ஆனால், அவர் தங்கியிருப்பது அமைதியைப் பாதிப்பதால் அவர் உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும்'' என்று மார்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பீமன் போஸ் கூறினார்.