நமது நாட்டில் மிக அதிக அளவிற்கு கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு நமது அணுத் திட்டத்தின் மூன்றாவது திட்டத்தை எட்டுவதற்கு முன் அதற்கு நம்மிடம் பெரும் அளவிற்கு புளூட்டோனியம் இருப்பு அவசியமாகிறது என்று மத்திய அமைச்சர் பிரத்விராஜ் சவான் கூறினார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் மீது உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் அலுவலக அமைச்சர் பிருத்வி ராஜ் சாவான் இவ்வாறு கூறினார்.
யுரேனியத்தை மட்டுமே எரிபொருளாகக் கொண்டு இயங்கி வரும் அணு உலைகளில் இருந்து, யுரேனியம் பயன்படுத்துதலால் பெறப்படும் புளூட்டோனியத்தை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் வேக ஈனுலைத் திட்டத்திற்கு (Fast breeder) இந்தியா வந்துள்ளது. இது நமது அணுசக்தி திட்டத்தின் இரண்டாவது கட்டமாகும்.
வேக ஈனுலையில் யுரேனியமும் புளூட்டோனியமும் பயன்படுத்தப்படும்போது, பயன்படுத்தப்பட்ட அதே அளவிற்கும் கூடுதலாக மீண்டும் எரிபொருள் பெறப்படுகிறது என்றும், அப்படி கிடைக்கும் புளூட்டோனிய எரிபொருள் இருப்பு போதுமான அளவிற்கு அதிகரித்த பிறகுதான் புளூட்டோனியத்தையும், தோரியத்தையும் கலந்து எரிபொருளாக பயன்படுத்தும் தோரியம் அணு உலைகளுக்கு இந்தியா அடியெடுத்து வைக்கும் என்று பிருத்விராஜ் சவான் கூறினார்.
தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிகரற்று விளங்குகிறது என்றும், ஆனால் தோரியத்தைப் பயன்படுத்தி அணு உலைகளை இயக்கும் அந்த நிலையை எட்டுவதற்கு நம்மிடம் போதுமான அளவிற்கு புளூட்டோனிய இருப்பு அவசியமாகிறது என்றும் புளூட்டோனிய இருப்பு அதிகரிக்க போதுமான அளவிற்கு யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆனால் நமது எதிர்காலத் திட்டத் தேவைகளான யுரேனியம் எரிபொருள், போதுமான அளவிற்கு நமது நாட்டில் இல்லாததால்தான் அணுசக்தி ஒத்துழைப்பின் மூலம் அதனை உலக நாடுகளில் இருந்து பெற அரசு முயற்சித்து வருவதாகவும் சவான் கூறினார்.
தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் போது ஆண்டு ஒன்றுக்கு 1,50,000 கிகா வாட் (1 கிகா வாட் = 1 மெகா வாட்) மின்சாரம் தயாரிக்கும் திறனை நாம் பெறுவோம் என்று பிருத்விராஜ் சவான் கூறினார்.