நந்திகிராமில் கட்டுக்கடங்காமல் நடந்துவரும் வன்முறைகள் விவகாரத்தில் அரசியல் சட்டப்பிரிவு 355 -ஐப் பயன்படுத்தி மேற்கு வங்க அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி வலியுறுத்தினார்.
மக்களவை இன்று காலை தொடங்கியவுடன் கேள்வி நேரம் நடந்தது. கிராமப்புறமருத்துவ வசதிகளில் குறைபாடு, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளித்தனர்.
பின்னர் மதியம் 12.08 மணிக்கு விதி 193 -ன் கீழ் நந்திகிராம் விவகாரத்தின்மீது வாக்கெடுப்பில்லாத விவாதம் தொடங்கியது. முதலில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே. அத்வானி தனது கருத்துகளை முன் வைத்தார்.
விவாதத்தில் 45 நிமிடங்கள் பேசிய அத்வானி, கடந்த மார்ச் 14 -ம் தேதி நந்திகிராமில் நடந்த வன்முறைகளை விவரித்தார். அண்மையில் அவரின் தலைமையில் நந்திகிராமிற்குச் சென்ற தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் குழுவினர் நடத்திய விசாரணைத் தகவல்களை விளக்கினார்.
''நந்திகிராம் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, 'நந்திகிராமில் நடந்தது சட்டத்திற்கு எதிரானது, ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று கூறியுள்ளார்.
நந்திகிராம் விவாகாரத்தில் மேற்குவங்க மாநில ஆளுநரை மத்திய அரசு அழைத்து விரிவான விசாரணை அறிக்கையை வழங்குமாறு கேட்க வேண்டும்.
நந்திகிராம் வன்முறைகளை கொல்கத்தா உயர்நீதிமன்றம் 'சட்டவிரோதமானது' என்று கூறியுள்ளது. நந்திகிராமில் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல்படையின் மூத்த அதிகாரி ஒருவர், மாநில அரசிடம் இருந்து தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
நந்திகிராமில் நிலவும் உண்மையான சூழ்நிலைகளைத் தெரிந்துகொள்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவினை மத்திய அரசு அனுப்ப வேண்டும்.
அதேநேரத்தில், மேற்குவங்கத்தில் வன்முறை பாதித்த பகுதிகளில் நடந்தது என்ன என்று அதிகாரபூர்வ அறிக்கையை மத்திய அரசும், மக்களைவையும் பெற்று அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வேண்டும்.
தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் எனது தலைமையில் நந்திகிராமிற்குச் சென்றிருந்தபோது நான் அம்மாநில ஆளுநரைச் சந்தித்தனர்.
அவர் ஏற்கெனவே வன்முறைகள் தொடர்பான தனது ஆதங்கத்தை 'அப்பட்டமான பயங்கரம்' என்ற வார்த்தையின் மூலம் வெளிப்படுத்திவிட்டார்.
மத்திய அரசுக்கு அரசியல் சட்டப்பிரிவு 355 ஐப் பயன்படுத்தி மேற்குவங்க அரசை எச்சரிக்க அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் எச்சரிக்கையை மேற்குவங்க அரசு கேட்காவிட்டால் அரசியல் சட்டப்பிரிவு 356 ஐப் பயன்படுத்தி மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியைஅமல்படுத்தப் பரிந்துரைக்க வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி நந்திகிராமில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தோனேசிய நிறுவனம் ஒன்று ரசாயன ஆலை அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்த முனைந்தபோது இந்த வன்முறை வெடித்தது.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் காவல்துறையினரின் உடையில் வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதை மறைக்கும் வகையில் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கருத்துகளைக் கூறியுள்ளார். இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் வரலாற்றில் நந்திகிராம் ஒரு முக்கியத் திருப்பத்தை உருவாக்கப் போகிறது'' என்றார் அத்வானி.
மேற்குவங்க மாநில ஆளுநரின் பெயரை அத்வானி உச்சரிக்கும் போது மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும், ஆளுநரின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
ஆளுநரால் வெளியிடப்பட்ட அறிக்கையை ஆதாரமாகக் காட்டுவதற்கு அவை விதிகளில் இடமில்லை என்றும் அவைத் தலைவர் சுட்டிக்காட்டினார்.