''இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு துரோகம் இழைக்க மத்திய அரசு நினைத்தால் அதற்கான விலையை கொடுக்க நேரிடும்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு இடதுசாரி கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த நிலையில் சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்படும் பேச்சு விவரங்கள் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இடதுசாரிகள் உயர்மட்டக் குழுவிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக யெச்சூரி தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர் அவ்வாறு மத்திய அரசு நடந்து கொள்ளாவிட்டால் அதற்கான அரசியல் விலையை கொடுக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இடதுசாரி கட்சிகளிடம் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்கும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்திய பேச்சு விவரம் தெரிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக யெச்சூரி கூறினார்.
இதற்கிடையில் வியன்னா சென்றுள்ள தேசிய அணுசக்தித் துறைத் தலைவர் அணில் ககோட்கர் இன்று சர்வதேச அணுசக்தி முகமையின் பொதுச் செயலர் முகமது எல்பராடியைச் சந்திக்கிறார்.