நந்திகிராம் பிரச்சினையில் எதிர்க்கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, நந்திகிராம் பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி கூறினார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15ஆம் தேதி துவங்கியது. மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் பிரச்சினையால், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி ஏற்பட்டு இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகின்றன. இதனால், நேற்று வரை நாடாளுமன்றத்தில் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை.
இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண விரும்பிய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பா.ஜனதா கூட்டணி, இடதுசாரி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி மத்திய அமைச்சர்கள் சரத்பவார், பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி ஆகியோருக்கு நேற்று உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மாலை அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தை முடிவில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகவும், நந்திகிராம் பிரச்சினையில் ஏற்பட்ட முட்டுக்கட்டை நீங்கிவிட்டதாகவும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நந்திகிராம் பிரச்சினையில் பா.ஜனதா கட்சி சார்பில் ஒத்தி வைப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக 193-வது பிரிவின்கீழ் ஓட்டெடுப்பு இல்லாத குறைந்த நேர விவாதம் இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்றும் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி தெரிவித்தார்.