ஜம்முவில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பயிற்சிக்காக செல்லவிருந்த 3 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
யூரி, பாரமுல்லா மாவட்டங்களைச் சேர்ந்த இந்தத் தீவிரவாதிகள் 3 பேரும் லஷ்கர் இ தயீபா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ரகசிய இடத்தில் பயிற்சி பெறுவதற்காகச் சென்று கொண்டிருந்தனர்.
இதற்காக கடந்த 16 ஆம் தேதி காஷ்மீரில் புறப்பட்ட இவர்கள், இன்று ஜம்முவிற்கு வந்துள்ளனர். நாளை காலை பூஞ்ச் பகுதிக்குச் செல்லத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் காவலர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்து விட்டனர்.
கைதான தீவிரவாதிகளின் விவரம் குலாந்தரின் மகன் குலாம் முகமது, குலாம் நபியின் மகன் இம்தியாஸ் அகமது, குலாம் முகமதுவின் மகன் அப்சல் மஸ்ஜித் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி அழைத்துச் செல்வதற்கு உரிய ஆட்கள் வராததால் 2 நாட்கள் காத்திருக்குமாறு தீவிரவாதிகள் கூறியுள்ளனர். எனவே இவர்கள் 3 பேரும் ஜம்முவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள லஷ்கர் இ தயீபா இயக்கத் தளபதி அபு பில்லாதான் இதற்குக் காரணம் என்றும், இளைஞர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டியவுடன் ரூ.1 லட்சம் தருவதாக அவர்களின் பெற்றோரிடம் வாக்களித்துள்ளான் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.