புது டெல்லி உப்ஹார் திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி புது டெல்லியில் உள்ள உப்ஹார் திரையரங்கில் 'பார்டர்' என்ற இந்தித் திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது திரைக்கு அருகில் திடீரென்று தீ பிடித்தது.
திரையரங்கின் கதவுகள் குறுகலாக இருந்ததால் ரசிகர்கள் வெளியில் வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். இந்தத் தீ விபத்தில் 59 பேர் உடல் கருகி இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து தொடர்பாக திரையரங்கின் உரிமையாளர்கள் சுஷில், கோபால் அன்சால் உள்பட 16 பேர் மீது, சட்டத்தை மீறுவதால் பிறரின் இறப்புக்குக் காரணமாக இருத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் பொதுப் பணித்துறை அதிகாரி எஸ்.என்.தந்தோனா, உப்ஹார் திரையரங்கு இயக்குநர்கள் சுரேந்தர் தத், ஆர்.எம்.பூரி, திரையரங்கு மேலாளர் மல்கோத்ரா ஆகிய 4 பேர் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது இறந்து விட்டனர்.
உப்ஹார் திரையரங்கின் மேலாளர்கள் ராதாகிருஷ்ணன், நிர்மல் சோப்ரா, அஜித் செளத்ரி, மன்மோகன் உனியால், டெல்லி வித்யுக் வாரிய உறுப்பினர்கள் பிரிட்ஜ் மோகன் சதீஜா, ஏ.கே.கீரா, பிர் சிங், மாநகராட்சி அதிகாரிகள் ஷியாம் சுந்தர் சர்மா, என்.டி.திவாரி, தீயணைப்புத் துறை அதிகாரி ஹெச்.எஸ்.பவார் ஆகிய 10 பேரும் மற்ற குற்றவாளிகள் ஆவர்.
இவ்வழக்கு டெல்லி பாட்டியலா கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாக வேண்டிய தீர்ப்பு, பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகத் தள்ளிப் போனது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மம்தா சேகல், குற்றம்சாற்றப்பட்ட 12 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
குற்றவாளிகள் 12 பேருக்கும் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உப்ஹார் திரையரங்கு தீ விபத்து வழக்கை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
அதில், திரையரங்கு உரிமையாளர்கள் கட்டட விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றவில்லை என்றும், மாநகராட்சி அதிகாரிகள் பலரும் இதற்கு உடந்தை என்று கூறப்பட்டு இருந்தது.
சுமார் 10 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் போது 115 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.