காஷ்மீரில் இன்று நடந்த மோதலில் அல் பாதர் இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள சித்ரகாம் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாகக் காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஷாய்ன்போரா காவல்நிலையக் கட்டுப்பாட்டுக்குள் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர் சித்ரகாம் கிராமத்தை சுற்றிவளைத்தனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கித் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற மோதலின் இறுதியில் குல்சார் அகமது சோப்பன், அபித் ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அல் பாதர் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.