நந்திகிராமில் நடந்த வன்முறைகள் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அப்பாவி உழவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் காடெர்நாத் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'நந்திகிராமில் ஆளும் கட்சியின் குண்டர்கள் நடத்திவரும் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்து விட்டதால் நீதிமன்றம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் சட்டப் பிரிவு 356 -ஐ பயன்படுத்தி மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்தரன், ஜே.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ''மத்திய அரசுக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில ஆளுநருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை'' என்றனர்.
அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி மாநில அரசைக் கலைக்கும் வேலை மத்திய அரசுடையதே தவிர நீதிமன்றத்துடையது அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அதற்கு மனுதாரரின் வழக்கறிஞர், நந்திகிராமில் நடைபெற்ற கொலைகள் எல்லாம் சட்டவிரோதமானது என்று கூறியுள்ள கொல்கத்தா உயர் நீதிமன்றம், ம.பு.க. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதற்கு நீதிபதிகள், ''நந்திகிராம் விவகாரத்தை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்துள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தலையிட்டுள்ளது. இதற்கு மேல் எவ்வளவு அமைப்புகள்தான் தலையிட வேண்டும்?'' என்று கேள்வி எழுப்பினர்.
முன்னதாக, நந்திகிராம் விவகாரம் குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், வன்முறையில் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.