சாலை மறியல் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
சந்திரசேகர் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சாலை மறியல் போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால், அதற்குத் தடை விதிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜெ.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''முல்லைப் பெரியாறு அணைக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும் காலை முதல் மாலை வரை சாலை மறியல் போராட்டங்கள் நடக்கின்றன. பொதுமக்களை பாதிக்கும் இதுபோன்ற விவகாரங்களை அனுமதிக்கக் கூடாது'' என்றார்.
விசாரணையின் இறுதியில், சாலைமறியல் போராட்டங்களுக்குத் தடைவிதிக்க முடியாது என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.