சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால் கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா பதவி விலகினார். அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அவர் இன்று மாலை நேரில் கொடுத்தார்.
மொத்தம் 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகச் சட்டசபையில் பா.ஜ.க.விடம் 79 உறுப்பினர்களும், மதசார்பற்ற ஜனதா தளத்திடம் 58 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
அப்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி மதசார்பற்ற ஜனதா தளம் 20 மாதங்கள் ஆட்சியில் இருந்தது. பின்னர் ஆட்சியை பா.ஜ.க.விடம் ஒப்படைக்க மதசார்பற்ற ஜனதா தளம் மறுத்து விட்டது. இதனால் பா.ஜ.க.-ம.ஜ.த. கூட்டணி அரசு கவிழ்ந்தது. அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின்னர் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடா, காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க எடுத்த முயற்சிகளும் தோல்வியைச் சந்தித்தன.
இதையடுத்து அதிரடியாக பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்க தேவகவுடா முன் வந்தார். சுமார் 1 மாதகாலப் போராட்டத்திற்குப் பிறகு பா.ஜ.க. ஆட்சியமைத்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் எட்டியூரப்பா கடந்த 12 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.
அப்போது, பா.ஜ.க. தனது பெரும்பான்மையை 19 ஆம் தேதி நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராமேஷ்வர் தாகூர் உத்தரவிட்டார்.
கூட்டணியின் ஒப்பந்தப்படி துணை முதல்வர் பதவி மதசார்பற்ற ஜனதா தளத்திடம் அளிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ளாத தேவகவுடா, 12 நிபந்தனைகளை பா.ஜ.க.விற்கு விதித்தார். அதில் பல பா.ஜ.க.விற்கு அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன.
குறிப்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும்போது மதசார்பற்ற ஜனதா தளத்தின் முடிவே இறுதி முடிவாக இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை பா.ஜ.க. ஏற்க மறுத்தது. நாங்கள் ஆதரவளிக்க எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று கூறி தேவகவுடாவைச் சமரசம் செய்ய பா.ஜ.க. முயன்றது.
ஆனால் அதை தேவகவுடா ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னாள் முதல்வர் குமாரசாமியுடன் முதல்வர் எடியூரப்பா நேற்று நடத்திய சமரசப் பேச்சுகளும் தோல்வியடைந்தன.
இந்நிலையில் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கு முன்பு மதசார்பற்ற ஜனதா தள சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாத பா.ஜ.க.வுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா,"எங்கள் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே எடியூரப்பா வெளியேற்றப்படுகிறார்'' என்றார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த பா.ஜ..க. தலைவர் ராஜ்நாத் சிங், மதசார்பற்ற ஜனதா தளத்தின் காலடியில் சரணடைய முடியாது என்று கடுமையாகக் கூறினார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்னரே, ஆளுநரைச் சந்தித்து தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.
பா.ஜ.க. ஆட்சி ஏற்படாத நிலையை அடுத்து கர்நாடகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகிவிட்டது.