டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள 75 பேரின் முதல் பட்டியலை பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி முதல்வர் நரேந்திர மோடி மீண்டும் மணிநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 10 அமைச்சர்களும் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட 20 பேருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 57 பேரில் 13 பேருக்கு இத்தேர்தலில் நிற்க வாய்ப்பு தரப்படவில்லை. இதற்கு காரணம் அந்த உறுப்பினர்களுக்கு எதிரான சூழ்நிலை தொகுதியில் நிலவுவதாக பா.ஜ.க பொதுச் செயலாளர்களில் ஒருவரும், மத்திய தேர்தல் குழு செயலாளருமான அனந்தகுமார் கூறினார்.
குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட 2 உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். மேலும் 5 உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது உறுப்பினராக உள்ள பா.ஜ.க.வின் எஞ்சியுள்ள 37 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.