இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் உருவாக்க இந்திய அணு சக்தித் துறைக் குழு சர்வதேச அணுசக்தி முகமையுடன் வரும் 21ஆம் தேதி (புதன்கிழமை) பேச்சு நடத்த உள்ளது.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசிற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இதையடுத்து கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்துவதற்காக அணுசக்தி துறைத் தலைவர் அணில் ககோட்கர் நாளை வியன்னா புறப்படுகிறார்.
அவர், வரும் 21ஆம் தேதி (புதன்கிழமை) அன்று சர்வதேச அணுசக்தி முகமையின் பொதுச் செயலர் முகமது எல்பராடியைச் சந்திப்பார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அணில் ககோட்கருடன், அணுசக்தி துறையின் திட்டக்குழு இயக்குநர் ரவி பி கிரோவரும் செல்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டதற்கு, ''நாங்கள் சர்வதேச அணுசக்தி முகமையிடம் சென்றுள்ளோம். பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றார். மேலும் விரிவாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை.
சர்வதேச அணுசக்தி முகமையுடன் கண்காணிப்பு ஒப்பந்தத்தின் வரைவைத் தயாரிக்கும் விதமாக ஏற்கனவே அணு சக்தி துறை சில பேச்சுகளை நடத்திவிட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
வரைவு ஒப்பந்தம் தயாராகிவிட்டது, சில நாட்களில் அது இறுதி செய்யப்பட்டுவிடும் என்றும் அவை தெரிவித்தன.