'சிதிர்' புயல் தாக்கியதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்திற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா முதல்கட்டமாக 2.1 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது.
வங்கக் கடலில் உருவான 'சிதிர்' புயலுக்கு வங்கதேசத்தில் 2,300 பேர் பலியாகி உள்ளனர். 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
புயலுக்குப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயற்கைச் சீற்றத்தால் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு, பொருளிழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள பிரதீபா பாட்டீல், இந்தச் சோகத்தை வங்கதேச மக்கள் தன்னம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு எப்போதும் உள்ளது என்று கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் மீட்புப் பணிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து வங்கதேச அரசுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா
வங்கதேசத்திற்கு அவசரகால உதவித் தொகையாக 2.1 பில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'சிதிர்' புயலில் சிக்கி தங்கள் உற்றார் உறவினரை இழந்து வாடும் வங்கதேச மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
''மீட்பு பணிகளுக்கு உதவி செய்யும் வகையில் யு.எஸ்.எஸ். எஸ்ஸெக்ஸ், யு.எஸ்.எஸ். கீர்சார்ஜ் ஆகிய இரண்டு கப்பல்களை ஏற்கனவே அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
இதுதவிர, 35 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கூரைகள், விரிப்புகள், உடைகள் போன்ற பொருட்களையும் அமெரிக்கா அனுப்ப உள்ளது.
மேலும், 18 பேர் கொண்ட அமெரிக்க மருத்துவக் குழுவினர் வங்கதேசத்தில் பணிபுரிந்து வருகின்றனர்'' என்று அமெரிக்கா கூறியுள்ளது.