நாடாளுமன்றத்தில் நந்திகிராம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன.
மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு நிலங்களைக் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
ஆனால், நந்திகிராம் விவகாரம் ஒரு மாநிலப் பிரச்சனை. எனவே அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தேவையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மக்களவை கூடியதும், பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நந்திகிராம் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டன. இதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதேநிலை மாநிலங்களவையிலும் நிலவியது.
இதைத் தொடர்ந்து இரு அவைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் அவை 12 மணிக்கு கூடியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் இருஅவைகளும் நாளை ஒத்தி வைக்கப்பட்டது.