இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறியுள்ளார்.
மத்தியில் கூட்டணி அரசு நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி நினைவில் கொள்ள வேண்டும் என்றும், பெரும்பாலான அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என கருதுவதாகவும் கரத் தெரித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பது குறித்து கேட்டபோது, நாடாளுமன்றத்தை மீறியும் இந்த நாட்டின் நன்மைக்கு எதிராகவும் எந்த ஒப்பந்தத்தையும் செயல்படுத்த முடியாது என்று பிரகாஷ் கரத் கூறியுள்ளார்.
இதனிடையே சர்வதேச அணு சக்தி முகமையுடன் பேச்சு நடத்த காட்டப்பட்டுள்ள பச்சைக் கொடி இந்த பிரச்சனையில் இடதுசாரி கட்சிகள் தங்களது எதிர்ப்பை மென்மையாக்கி கொண்டிருப்பதாக கருதக் கூடாது. ஒப்பந்தத்திற்கு தங்களது எதிர்ப்பு தொடர்ந்து நீடிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா கூறினார்.
நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வருமா என்று கேட்டபோது, மக்கள் மீது தேர்தலை திணிக்க தாங்கள் விரும்பவில்லை. தங்களது எதிர்ப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீறினால் இடைத் தேர்தலுக்கு அதுவே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று ராஜா தெரிவித்தார்.