கார்த்திகை திருவிழாவன்று உத்தரபிரதேசத்தில் தாக்குதல் நடத்ததிட்டமிட்டிருந்த 3 பயங்கரவாதிகளை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் கார்த்திகை சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாவாகும். எனவே தலைநகர் லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
லக்னோவில் உள்ள சீத்தாபூர் சுற்றுச் சாலையில் சிறப்பு அதிரடிப் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீத்தாபூரில் இருந்து லக்னோவிற்கு வந்த வாகனம் ஒன்றைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்திச் சோதனையிட்டனர்.
காவல்துறையினரைக் கண்டதும் அந்த வாகனத்தில் இருந்த 3 நபர்கள் தப்பிக்க முயன்றனர். காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் 3 பேரும் பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்று தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 2 ஏ.கே.47 துப்பாக்கிகள், 3 சீனா கைத்துப்பாக்கிகள், 12 கையெறி குண்டுகள், 120 தோட்டாச் சரங்கள், 4 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லக்னோவில், கார்த்திகை விழாவன்று தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.