நாடாளுமன்றக் கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவதற்கு ஏதுவான வகையில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. 3 வாரம் நடைபெறவுள்ள இக்கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளன.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலங்களைக் கையகம் செய்வதை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டங்களில் வெடித்த வன்முறைகள், நமது நாட்டின் அயலுறவுக் கொள்கையுடன் தொடர்புடைய இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், உயர்ந்து வரும் விலைவாசி உள்பட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
எனவே சிக்கல்களை அமைதியான முறையில் விவாதித்து முடிவெடுக்க எல்லா கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.